முல்லைப் பாட்டு

நல்லோர் விரிச்சி கேட்டல்

முல்லைத்திணைக்கு உரிய முதற்பொருளாகிய கார்காலப் பெரும்பொழுதும், மாலைக்காலச் சிறுபொழுதும் முல்லைப்பாட்டின் தொடக்கமாக அமைந்துள்ளது. திருமால் அகன்ற உலகை வளைத்துக் கொண்டுள்ளான். சுழலும் திகிரிச் சக்கரத்தையும், சங்கையும் கைகளில் ஏந்திக் கொண்டுள்ளான். (வள்ளல் மாபலி) வார்த்த நீரை வாங்கிக்கொண்டு நிமிர்ந்தான் (விசுவரூபம்). அந்தத் தோற்றம் போல, கடல்நீரைப் பருகி எழுந்த மழைமேகம் பெருமழை பொழிந்தது (கார்காலம்). மழை பொழிந்த மாலை நேரம்.

கட்டுக்காவல் மிக்க பழமையான ஊர். அந்த ஊருக்கு வெளிப்புறம் பெருமுது பெண்டிர் (35 அகவை தாண்டிய மகளிர்) சென்றனர். நாழியில் கொண்டு சென்ற நெல்லையும், வண்டுகள் மொய்க்க மலரும் புத்தம்புது முல்லைப் பூவையும் தூவினர். விரிச்சிக்காகக் காத்திருந்தனர். (விரிச்சி என்பது பிறர் வாயிலிருந்து விரியும் பேச்சுக் குரல்)

தலைவியைத் தேற்றுதல்

ஆய்மகள் பச்சைக் கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றிலே தொடுத்து வைத்திருந்தாள். அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் கன்றின் கழுத்தை அந்த ஆய்மகள் தன் கக்கத்திலே அணைத்துக்கொண்டு அதனைத் தேற்றும் சொற்களைப் பேசினாள். “கையில் வளைகோல் வைத்திருக்கும் கோவலர் பின்னிருந்து ஓட்டிக்கொண்டு வர உன் தாயர் (தாய்ப்பசு) இன்னே (இப்பொழுதே) வந்துவிடுவர்என்றாள். [இந்த நல்ல சொற்கள் விரிச்சி கேட்டுக்கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே அவர்கள் கேட்ட வரிச்சி]

இது நல்லவர் வாயிலிருந்து வந்த ‘புள்சகுனம். பகைவரைப் போர்முனையில் வென்ற தலைவர் தாம் மேற்கொண்ட வினை முடிந்து அவர்கள் தந்த திறையுடன் வருவது உறுதி. மாயோய்! (மாயோன் எனபதன் பெண்பாற் பெயர். முல்லைநிலப் பெயர். பசுமையான மாந்தளிரின் மாமை நிறம் கொண்டவள்) உன் கவலையைப் போக்கிக்கொள்என்று விருச்சியைக் கேட்கும்படி பெண்கள் தலைவனைப் பிரிந்திருந்த மாயோளுக்குக் காட்டினர். அச்சொற்களைக் கேட்ட பின்னரும் மாயோளின் பூப்போன்ற கண்களிலிருந்து அவள் புலம்பும் முத்துக்ககள் (நீர்த்துளிகள்) உதிர்ந்தன.

 

பாசறையின் இயல்பு

பகைப்புலம் சென்ற தலைவன் பாடிவீட்டில் இருந்தான். அது காட்டாறு பாயும் முல்லை நிலத்தில் இருந்தது. மணம் கமழும் பிடவம் பூச்செடிகள் அழிக்கப்பட்டு அந்தப் பாடிவீடு அமைக்கப்பட்டிருந்தது. வேட்டையாடும் விலங்குகள் அதில் நுழையாவண்ணம் முள்வேலிச் சுற்றுமதில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்தது. காட்டாறு கடல்போல் அகன்றதாய் அதனைச் சுற்றிலும் ஓடும்படிச் செய்யப்பட்டிருந்தது.

யானைப் பாகரது செயல்

பாடிவீட்டுத் தெருக்களில் உவலைக்கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த யானைக்குக் கரும்பையும் கதிரோடு கூடிய நெல்லுத்தாளையும் தழைகளையும் உணவாகத் தந்தனர். அவற்றை அந்த யானை தன் கைகளால் வாங்கி உண்ணாமல் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டது. அதனை உண்ணும்படி, வடமொழிச் சொற்களைச் சொல்லி, கையில் கவைமுள் அங்குசம் வைத்திருந்த இளைஞர்கள் பயிற்றுவித்துக் கொண்டிருந்தனர்.

வீரர்கள் தங்கும் படைவீடுகள்

தலைவனுக்குப் பாதுகாப்பு அரணம் அமைக்கப்பட்டிருந்தது. கல்லில் துவைத்துக் கட்டும் ஆடையை நோன்பிருக்கும் பார்ப்பான் முக்கோல் நடுவில் வைத்திருப்பது போல வில்லும் அம்பறாத் தூணியும் வைக்கப்பட்டிருந்தன. வேல்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்திருந்தனர்.

அரசனுக்கு அமைத்த பாசறை

தலைவனுக்கென்று தனிப் பாடிவீடு இருந்தது. அது உயர்ந்த தூண் நிறுத்திய அகம். பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.

மங்கையர் விளக்குகளை ஏந்துதல்

கச்சுடை அணிந்து, முதுகுப்புறம் கூந்தல் புரள, கையில் வளையலுடன் வாளேந்திய மங்கையர் சுரைக்குடுக்கையில் கொண்டுவந்த எண்ணெயை இரவினைப் பகலாக்கும் வகையில் எரியும் விளக்குகளில் ஊற்றி சுடர் மங்கும்போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.

 மெய்காப்பாளர் காவல்புரிதல்

நீண்ட நாக்கினை உடைய மணி இது, நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. பூத்திருக்கும் அதிரல் கொடி சிதைக்கும் காற்றில் ஆடுவது போல, முடி போட்டுப் போர்த்தியிருக்கும் துணி அக்காற்றில் ஆடும்படி பெருமூதாளர் (மெய்க்காப்பாளர்) தலைவனுக்குப் பாதுகாவலாக நடந்துகொண்டிருந்தனர்.

நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்

பிழையின்றிக் காலத்தைக் கணித்தறியும் நாழிகைக் கணக்கர் கைகளால் தலைவனை வாழ்த்தித் தொழுதுகொண்டு “உலகம் வெல்ல வந்துள்ளவரே! குறுநீர்க் கன்னல் இத்தனை நாழிகை காட்டுகிறதுஎன்று இசைப்பாட்டு ஒலியோடு தெரிவித்தனர்.

அரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில் ஆழ்தல்

இடையில் கச்சமாகக் கட்டிய உடை, உடலில் மெய்ப்பைச் சட்டை, அச்சம் தரும் தோற்றம், வலிமை மிக்க உடம்பு, உறுதி கொண்ட நெஞ்சுரம் ஆகியவற்றைக் கொண்ட யவனர் பழகிய புலியை சங்கிலித் தொடரிலிருந்து விடுவித்து அரசன் படுக்கைக்குக் காவல் புரிந்தனர்.

அரசனின் பள்ளியறை திரையால் இரண்டு அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. ஒருபக்க அறையில் அரசன் படுத்திருந்தான். மறுபக்க அறையில் ஊமை மிலேச்சர் மணிவிளக்கம் வைத்துக்கொண்டு மெய்க்காப்பாளராக விளங்கினர்.

அரசனது சிந்தனை

பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும் போரைப் பற்றிய நினைவு. அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை, வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு பதைப்பது போல் துடித்த காட்சி, அரசனின் வெற்றியை வாழ்த்திக்கொண்டே செஞ்சோற்றுக்கடன் கழித்து மாண்டவர்கள், தோலிலே அம்பு பாய்ந்த வலியால் உணவு கொள்ளாமல் தள்ளாடிச் செவிகளைச் சாய்த்துக்கொண்டு கிடக்கும் குதிரை ஆகியவற்றைச் சிந்தித்துக்கொண்டு, ஒரு கை தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு கையின் விரல் நண்டுக் கொடுக்கு போல் பகைவரைச் சுட்டிய வண்ணம் காட்டிக்கொண்டு அரசன் பள்ளியில் கிடந்தான்.

  தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்

பாசறையில் இருக்கும் தலைவனின் பிரிவால் தலைவிக்கு உறக்கம் வரவில்லை. கவலை மேலிடுகிறது. நெஞ்சை அவனிடம் செலுத்திப் புலம்பும் நீண்ட நினைவோடு தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாள். கழன்றோடும் வளையல்களைத் திருத்திக் கொள்கிறாள். என்றாலும் ஆசை விடவில்லை. ‘ஒய்எனப் பெருமூச்சு விடுகிறாள். அம்பு பாய்ந்த மயில் போல நடுங்குகிறாள். அணிகலன்கள் கழன்று விழுகின்றன. அருகில் பாவை-விளக்கு ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. இவள் இருக்கும் எழுநிலை மாடத்தின் (ஏழடுக்கு மாளிகையின்) வளைந்த பகுதி ஒன்றில் அருவி கொட்டும் ஓசையைக் கேட்டு நினைவை மாற்ற முயன்று கொண்டிருக்கிறாள்.

அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்

அருவி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்த தலைவியின் காதுகள் நிறையும்படி அரசனின் வெற்றி முழக்க ஒலி கேட்கிறது. பகைவரின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு, அவர்களின் படையையும் தன் படையுடன் சேர்த்துக்கொண்டு, வெற்றிக் கொடியை உயர்த்தியவண்ணம் மீள்வோர் சங்கும், கொம்பும் முழங்கும் ஒலி கேட்கிறது.

மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்

காயா அஞ்ச நிறத்தில் (கருநீலம்) பூத்தது. கொன்றை பொன் நிறத்தில் பூத்தது. கோடல் பூ கைவிரல்கள் போல் விரிந்து பூத்தது. தோன்றிப் பூ குருதி நிறத்தில் சிவப்பாகப் பூத்தது. இப்படிப் பூத்துக் குலுங்கும் முல்லை நிலத்தின் வரகுக் கொல்லையில் மான்கள் துள்ளி விளையாடின.

அரசனது தேரின் வருகை

வள்ளிக் கிழங்கு முதிர்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனின் தேர்க்குதிரைகளை தேரோட்டி விரைவாகச் செலுத்துக்கொண்டிருந்தான்.

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை ஆசிரியர்கள் (எம்.ஏ. பாடத்திட்டம்)

தமிழ்நாவல் தோற்றமும் வளர்ச்சியும்