தமிழ்நாவல் தோற்றமும் வளர்ச்சியும்
தமிழ்நாவல் தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை
உரைநடையில்
எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கிலேயர் ‘நாவல்’ என்பர். ‘நாவெல்லஸ்’ என்ற இலத்தின் சொல்லின் சிதைந்த வடிவமே நாவல் என்பதாகும். தமிழரும் முதலில் இதை நாவல் என்றே அழைத்தனர். பிறகு
வடமொழிப் பெயரால் நவீனம் என்றும் அழைத்தனர். பிறகு புதினம் என்று தமிழ்ப்படுத்திக்
கொண்டனர். தமிழ் இலக்கிய மரபில் புதினத்துக்கு என தனித்துவமான இடம் உண்டு அதை விரும்பிப்
படித்த, படிக்கும் வாசகர்கள் உண்டு. தமிழ்ப்புதினத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளை இக்கட்டுரையின்
வழிக் காண்போம்.
நாவலின் கட்டமைப்பு
நாவலின்
தாயகம் இத்தாலி ஆகும். கதை சூழ்ச்சி, பாத்திரங்கள், உரையாடல் என சிறந்த கட்டமைப்புடன்
பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி சிறந்த அறக்கருத்தையும் உணர்த்துவதே சிறந்த புதினத்தின்
கட்டமைப்பாகும்.
முதல் நாவல்
பல்வேறு
மொழிகளில் நாவல்களின் தோற்றம் நிகழ்ந்த காலச் சூழலில் ஆங்கிலக் கல்வி கற்ற தமிழ்ப்
படைப்பாளிகள் நாவல் துறையில் ஈடுபட விரும்பினர். மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை
இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டார். அவர் 1879இல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ 1887இல் எழுதிய ‘சுகுண சுந்தரி சரித்திரம்’ என்னும்
இரண்டு நாவல்களும் மிகப் புகழ்பெற்றன. தமிழிலக்கியத்தில் உரைநடை வகையைப் பின்பற்றிப்
புதிய துறையாகிய நாவல் துறைக்குத் தொடக்கம் செய்தார். வேதநாயகம் பிள்ளை தம்முடைய படைப்பை
‘வசன காவியம்’ எனக் கூறினார்.
தொடக்ககால நாவல்கள்
வேதநாயகம்
பிள்ளையை அடுத்து நடேச சாஸ்திரியார் ‘கோமளம் குமரியானது’ என்ற
நாவலை எழுதினார். கோமளம் குமரியானது அற்புத நவிற்சிக் கதையாகும். நடப்பியலை நாவலாக
எழுதத் தமிழில் முதன் முதலில் முயன்றவர் ராஜம் அய்யர். இவர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ மிகவும் புகழ் பெற்றது. விவேக சிந்தாமணியில் தொடர்கதையாக வெளிவந்தது.
19ஆம் நூற்றாண்டில் தமிழக மக்களின் வாழ்வியற் சூழலை இந்நாவல் பதிவு செய்துள்ளது. சிற்றூர்
வாழ்க்கையும், மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் விளக்கப்பட்டுள்ளன.
ராஜம்
ஐயரை அடுத்து அ.மாதவய்யா எழுதிய ‘பத்மாவதி சரித்திரம்’ மிகத்
தொன்மையான கதைமாந்தர் படைப்பைக் கொண்டது. அந்நாவலில் அவரின் சமூகச் சீர்திருத்த எண்ணங்கள்
வெளிப்படுகின்றன. அ.மாதவய்யா ‘விஜய மார்த்தாண்டம்’, ‘முத்து
மீனாட்சி’ என்னும் நாவல்களையும் எழுதியுள்ளார். விஜய மார்த்தாண்டம்
மறவர் சமுதாய வாழ்க்கையை வெளிப்படுத்துவது. முத்து மீனாட்சி ஓர் இளம் விதவையின் துன்பத்தை
வெளிப்படுத்திய நாவலாகும்.
அ.மாதவய்யாவிற்குப்
பிறகு தமிழ் நாவல் துறை வேறுவழியில் போகத் தொடங்கியது. பல வெளிநாட்டுத் துப்பறியும்
நாவல்களைப் படித்து அவற்றைப் போலவே தமிழில் எழுத விழைந்த நாவலாசிரியர்கள் தோன்றினர்.
வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், கோதை நாயகி அம்மையார், ஜே.ஆர்.ரங்கராஜு
போன்றோர் இத்தகு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.
நாவல்களின்
வகைப்பாடு
நாவல்களை,
துப்பறியும் நாவல், சமூக நாவல், வரலாற்று நாவல், மொழிபெயர்ப்பு நாவல், தழுவல் நாவல்,
வட்டார நாவல் எனப் பல வகைப்படுத்தலாம்.
துப்பறியும்
நாவல்
ஒரு
கொலையோ அல்லது சதிச்செயலோ நடந்தால், அதனைக் கண்டு பிடிக்க முயலும் ஒரு துப்பறியும்
நிபுணரின் நுண்ணிய துப்பறியும் அறிவை விளக்குவது இவ்வகை நாவல்கள். வடுவூர் துரைசாமி
ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு, கோதை நாயகி அம்மாள் போன்றவர்கள்
இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆவலைத் தூண்டுவதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும்
இந்நாவல்கள் அமையும். தமிழ்வாணன், பி.டி.சாமி, சுஜாதா, ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை
பிரபாகர், சுபா ஆகியோர் துப்பறியும் நாவல் எழுதிப் புகழ் பெற்றவர்களாவர்.
சமூக நாவல்
ஒரு
குறிப்பிட்ட சாதியினரின் அல்லது சமுதாய மக்களின் வாழ்க்கை முறை, செயல்பாடுகள், அவர்களின்
பிரச்சனைகள் ஆகியவற்றை ஆராய்வது சமுதாய நாவலாகும். சு.சமுத்திரத்தின் ‘கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை இதற்குச் சான்றாகக் கூறலாம். அகிலன் அவர்கள் எழுதிய
‘பால்மரக் காட்டினிலே’ என்ற நாவல் மலேயா இரப்பர் தோட்டத் தொழிலாளிகளின்
சமூக வாழ்க்கைப் பிரச்சனைகளை முழுவதுமாக வெளிப்படுத்தியது. காலந்தோறும் மக்கள் எதிர்கொண்ட
சிக்கல்களை எதிரொலிப்பன சமூகப் புதினங்களாகும்.
கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, மு.வரதராசன், அகிலன் போன்றோர்
சமூகப் புதினங்களால் மக்கள் மனதைக் கவர்ந்தவர்களாவர். கல்கியின் ‘அலையோசை’, ‘தியாகபூமி’, ‘மகுடபதி’ ஆகிய நாவல்களும், மு.வரதராசனின்
‘கயமை’, ‘அகல்விளக்கு’, ‘நெஞ்சில்
ஒரு முள்’, ‘கரித்துண்டு’ ஆகிய நாவல்களும்
சமூக நாவல்களுக்குத் தக்க சான்றுகளாகும்.
வரலாற்று நாவல்
தமிழக
வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்வரலாற்று நாவல்கள் தோன்றின. கல்கி, சாண்டில்யன்,
விக்கிரமன், ஜெகசிற்பியன் ஆகியோர் வரலாற்று நாவல்களால் புகழ்பெற்றோராவர். வரலாற்றுப்
புதினத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ‘கல்கி’ ஆவார். கல்கி
எழுதிப் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களுள் ‘பார்த்திபன் கனவு’,
‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
கோவி.மணிசேகரன்
தமிழில் பல்வேறு வரலாற்று நாவல்களையும், சமூக
நாவல்களையும் படைத்தவர். அவர் எழுதிய ‘பீலிவளை’, ‘செம்பியன்
செல்வி’ போன்றவை புகழ் பெற்றவை.
சாண்டில்யன்
தமிழ் வரலாற்று நாவல் துறையில் மிகவும் புகழ் பெற்றவர். தமிழில் வரலாற்றுத் தொடர்கதைகளாக
‘யவனராணி’, ‘கடல் புறா’, ‘மன்னன்
மகள்’, ‘ஜீவபூமி’, ‘கன்னிமாடம்’, ‘பல்லவ திலகம்’ போன்ற நாவல்களை எழுதிப்
புகழ் பெற்றார்.
‘நந்திபுரத்து
நாயகி’ என்ற பெயரில் எழுத்தாளர் விக்ரமன் ஒரு வரலாற்று நாவலை
எழுதினார். ஜெகசிற்பியன் ‘மகரயாழ் மங்கை’, ‘ஆலவாய் அழகன்’, ‘நாயகி நற்சோணை’, ‘அருள்மொழி நங்கை’, ‘திருச்சிற்றம்பலம்’ முதலிய நாவல்களை
வரலாற்று அடிப்படையில் எழுதினார். அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ மிகச்சிறந்த வரலாற்று நாவல்.
வட்டார நாவல்
ஒரு
குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் வாழும் மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக்
கொண்டு எழுதப்படும் நாவல் வட்டார நாவல் எனப்படும். அம்மக்களின் உரையாடல் நடையிலேயே
அந்நாவல் எழுதப்பட்டிருக்கும்.
இராஜம்
கிருஷ்ணனின் ‘குறிஞ்சித்தேன்’ மலைவாழ் மக்களின் வாழ்க்கையை
அவர்கள் மொழியிலேயே படம் பிடித்துக் காட்டுகிறது. அவரின் ‘கரிப்பு மணிகள்’ தூத்துக்குடி பக்கத்தில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வை
வெளிப்படுத்துகிறது. தங்கர்பச்சானின் ‘ஒன்பது ரூபாய்’ நோட்டு
பண்ருட்டி பகுதி மக்களின் வாழ்வைக் காட்டுகிறது. மேலும், பொன்னீலனின் ‘கரிசல்’, கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,
ஹெப்சிபா ஜேசுதாசின் ‘புத்தம் வீடு’ ஆகிய நாவல்களும் வட்டாரத்
தன்மையை வெளிப்படுத்துகின்றன.
பெண் நாவலாசிரியர்கள்
பெண்
நாவலாசிரியர்களுள் இராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, திலகவதி, கிருத்திகா
ஆகியோர் சிறந்த பெண் எழுத்தாளர்களாவர்.
மொழிபெயர்ப்பு
நாவல்
சிறந்த
பிறமொழி நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதை மொழிபெயர்ப்பு நாவல் என அழைத்தனர். காண்டேகரின்
மராட்டிய நாவலை கா.ஸ்ரீஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்தார், ஒரிய மொழிக் கதைகளைத் தமிழில்
மொழிபெயர்த்ததற்காக தமிழ்நாடன் சாகித்திய அகாதமி விருதுபெற்றுள்ளார்.
தழுவல் நாவல்
இவ்வகைப்
நாவல்கள் தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. டால்ஸ்டாயின் அன்னாகரினாவைத் தழுவி நாரண
துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்திகாயினி என்ற நாவலை எழுதினார். ரெயினால்சின் நாவலைத்
தழுவி மறைமலையடிகள் குமுதவல்லி என்ற நாவலை எழுதினார்.
முடிவுரை
இன்றைய சூழலில் நிறையவே பொழுதுபோக்குக் கருவிகள் வந்துவிட்டன. ஆனால் கடந்த காலத்தில் நாவல் வாசித்தல் என்பது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. அந்த வழக்கம் இந்தக் காலத்திலும் தொடர்ந்து வருவது நாவலின் ஆதிக்கத்தை எடுத்தியம்பும்.
Comments
Post a Comment