புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

கவிதை காலந்தோறும் புதிய கருத்தோட்டங்களையும், புதுப்புதுப் பார்வைகளையும் ஏற்று வளர்வது. இலக்கியம் என்றாலே அது இலக்கண வரம்புகளுக்கு உட்பட்ட செய்யுள் வடிவம்தான் என்றிருந்த ஒரு மரபு. உரைநடை செல்வாக்குப் பெறத் தொடங்கிய போது, கேள்விக்குள்ளானது. இது முதலில் மேலைநாடுகளில் நடைபெற்ற ஒரு படைப்பாக்கப் புரட்சி. கருத்துகளையும், பார்வைகளையும் மாற்ற முற்பட்ட படைப்பாளிகள் பழைய கருத்துகளை மட்டுமன்றி அவற்றைத் தாங்கிநின்ற பழைய வடிவங்களையும் புறக்கணித்தனர். Verse Libre என்னும் பெயரில் பிரான்சு நாட்டிலும், New Poetry என ஆங்கில நாட்டிலும் உருவாகிய முயற்சிகள் உலகின் பிற பகுதிகளிலும் பரவின. Free Verse என்ற கவிதை அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்தது. பிரான்சின் போதலேர், ரிம்போ, மல்லார்மே, ஜெர்மனியின் ரில்கே, அமெரிக்காவின் வால்ட் விட்மன், இங்கிலாந்தின் எஸ்ரா பவுண்டு, T.S. எலியட் போன்றோரின் முயற்சிகளால் புதுக்கவிதை பிறந்தது. தமிழில் இம்முயற்சிகள் தொடங்கப்பட்ட போது முதலில் ‘வசன கவிதை’ என்றும் பின்னர் ‘சுயேச்சா கவிதை’ ‘லகு கவிதை’ ‘விடுநிலைப்பா’ என்றும், அதன் பின்னர்ப் புதுக்கவிதை என்றும் வழங்கப்பட்டன. 1959இல் புதுக்கவிதை என முதலில் பெயர் வழங்கியவர் தமிழின் சிறந்த திறனாய்வாளரும், புதினப் படைப்பாளியும் ஆகிய க.நா.சுப்பிரமணியம் ஆவார்.

 தமிழில் புதுக்கவிதை

 புதுக்கவிதையின் தோற்றத்துக்கு வித்திட்டவராகப் பாரதியைத்தான் குறிப்பிட வேண்டும். தமிழ்க் கவிதையில் அதற்கு முன்பு இல்லாத புதுப்புதுக் கருத்துகளும் புதிய பார்வைகளும் பாரதி கவிதைகளில் இடம்பெற்றன. அரசியல், தேசிய இயக்கம், மொழியுணர்வு, பெண்ணுரிமை போன்றவைகள் தமிழ்க் கவிதைக்கு முற்றிலும் புதியவை. ஆன்மிகப் பார்வையிலும் கண்ணன் பாட்டு புதுமையானது; பாஞ்சாலி சபதம் அமைப்பிலும் பொருளிலும் புதுமை வாய்ந்தது. பல காலமாக ஏற்கப்பட்டிருந்த பத்தாம்பசலிக் கோட்பாடுகளையும் மூட நம்பிக்கைகளையும், சாதி சமய வேறுபாடுகளையும் வன்மையாக எதிர்த்த வகையில் பாரதியின் கவிதை இன்றுவரை புதுமை மங்காதது. ‘புதியன விரும்பு’ ‘தேசத்தைக் காத்தல் செய்’ ‘தையலை உயர்வுசெய்’, ‘கொடுமையை எதிர்த்து நில்’, ‘கற்பை இரு பாலார்க்கும் பொதுவில் வைப்போம்’ என்றெல்லாம் வெடிப்புறப் பேசிய பாரதியின் கவிதைதான் உள்ளடக்க அளவில் தமிழின் முதல் புதுக்கவிதை என வேண்டும்.

 வடிவ அடிப்படையிலும் பாரதியே முதன்முதலாகச் சோதனை செய்து பார்த்தவர். காட்சி, சக்தி, காற்று, கடல் என்ற தலைப்புகளில் பாரதி படைத்த வசன கவிதைகளே புதுக்கவிதைக்கு வடிவ முன்னோடிகள் ஆகும். உபநிடதங்களின் கவித்துவ அழகுகொண்ட தத்துவத்தில் திளைத்த பாரதி அவற்றைத் தமது தனிப்பார்வையில் எடுத்தளித்தவையாக அவற்றைக் கருதலாம். அவற்றை வசன கவிதையாகப் படைக்கலாம் என்ற உந்துதலைத் தந்தவர் முன்பு நாம் பார்த்த அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மன். விட்மனின் புரட்சிகரமான கருத்துக்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த Free Verse எனும் வசன கவிதை வடிவம் அவருக்குக் கைகொடுத்தது. இதனை உணர்ந்த பாரதி ஆன்மிக எழுச்சியை, ‘தத்துவக் கருத்துகளை’ தமக்கு அனுபவம் ஆகிய முறையில் வெளியிட ஏற்ற வடிவமாக வசன கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

வேதம், கடல், மீன், புயற்காற்று, மல்லிகை மலர்

இவை ஒரு பொருளின் பலதோற்றம்.

உள்ளதெல்லாம் ஒரே பொருள், ஒன்று.

இந்த ஒன்றின் பெயர் ‘தான்’.

‘தானே’ தெய்வம்.

‘தான்’ அமுதம், இறவாதது. (பாரதியார் கவிதைகள், ப.589)

 ‘அகம் பிரம்மாஸ்மி’ ‘தத்வம் அஸி’ என்னும் உபநிடத மகா வாக்கியங்கள் உணர்வு பொங்கும் கவிதை வாக்கியங்களாக இங்கு வெளிப்பட்டுள்ளன.

காற்றே உயிர் - அவன் உயிர்களை அழிப்பவன்.

காற்றே உயிர் எனவே உயிர்கள் அழிவதில்லை.

சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. (பாரதியார் கவிதைகள், ப.614)

 காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் தத்துவமே எனினும் பாரதி சொல்லும் விதத்தால் அது நெஞ்சில் புதுவிதமாகப் பூக்கிறது. இத்தகைய வசன கவிதை முயற்சியில் பாரதி தம் வாழ்வின் இறுதி ஆண்டுகளிலேயே ஈடுபட்டிருந்திருக்கிறார். வாழ்நாள் மேலும் இருந்திருந்தால் வசன கவிதையின் அடுத்தடுத்த படிநிலைகளை அவர் வளர்த்துக் காட்டியிருக்கக் கூடும்.

பிச்சமூர்த்தியும் பிறரும் 

 பாரதிக்கு அடுத்துப் புதுக்கவிதை முயற்சியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் ந. பிச்சமூர்த்தி. ‘மணிக்கொடி’ இதழில் 1934இல் பிச்சமூர்த்தி எழுதத் தொடங்கினார். செறிவாகவும் தெளிவாகவும் அறிவு பூர்வமான பார்வையில் கருத்துகளை அலசவும் சிந்தனைகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும் அவருக்கிருந்த இயல்பான அறிவுத் திறம் அவர் கவிதையில் பளிச்சிட்டது.

நாங்களோ கலைஞர்

ஆமைபோல் உணர்ச்சியின் கிணற்றில் அமிழ்வோம்.

முதுகோடு கொண்டு விதியை எதிர்ப்போம்.

கீழுல கேழும் தயங்காது இறங்கி

ஜீவன்கள் லீலையில் கூசாது கலப்போம்.

அணிலைப்போல் கொம்பேறி

ஒளிக்கனி கடிப்போம் (ந. பிச்சமூர்த்தி கவிதைகள், ப. 14)

 என்னும் வரிகளில் தமது கவிதை இயக்கத்தின் போக்கை அழகாக வெளிப்படுத்துகிறார் பிச்சமூர்த்தி. அவர் கவிதைகளில் வாழ்வின் முரண்களும், இயற்கையோடு மனிதன் கொள்ளத்தக்க உறவு இணக்கமும் முதன்மை பெற்றன. தத்துவமும் எளிய வெளிப்பாடு கண்டது. உணர்ச்சிக் கூறு மட்டுமின்றி அறிவுக் கூறும் கவிதையில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் வசன கவிதை சற்றுச் செறிவடைந்தது. பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து அவருடைய நண்பர் கு.ப.ராஜகோபாலனும், க.நா.சுப்ரமண்யமும் புதுக்கவிதை எழுதத் தொடங்கினர். பின்னர் வல்லிக்கண்ணனும் புதுமைப்பித்தனும் இவ்வரிசையில் இணைந்தனர். இவர்களது படைப்புத் தொடங்கிய காலம் 1937க்கும் 1944க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். புதுமைப்பித்தனைத் தவிர மற்றவர்களிடம் வசன கவிதைத் தன்மையே மிகுந்திருந்தது.

வாழ்க்கை ஒரு வெற்றி, ஒரு துடிப்பு

ஒரு காதற்பா, ஒரு இசை

மண்ணின் மாய மோனையில் பிறந்து

அரைத்தூக்கத்திலும் அதிசயத்திலும் அது உதிக்கிறது

கண் கண்டதற்கு மேல் ஓடுகிறது கனவு (சிறிது வெளிச்சம், கு.ப.ரா.)

 என்னும் வரிகளில் அழகுணர்ச்சியில் திளைப்பவராகக் காட்சி தரும் கு.ப. ராஜகோபாலன் பெண்மையின் மாபெரும் சக்தியையும் தம் கவிதைகளில் படம் பிடித்தவர்.

 கவிதை பற்றிய புதுமைப்பித்தனின் பார்வை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. சந்தலயம், சீர், அடியமைப்பு, ஒழுங்கு ஆகியவைகளைத் துறக்க அவர் விரும்பவில்லை. கவிதைகளின் உள்ளடக்கமாக அமைந்தவை, அவருடைய கதைகளில் காணப்படும் சமூக அங்கதம், எள்ளல், கண்டனம் ஆகியவைகளே. பின்னர் இக்கூறுகள் ஞானக்கூத்தன், மீரா போன்ற கவிஞர்களிடம் வளர்ச்சி கண்டன. மதிப்பீடுகளைத் தயக்கமில்லாமல் தூக்கி எறிந்துவிடும் புதுமைப்பித்தனின் துணிச்சல் பிற்காலக் கவிஞர் பலரிடமும் ஏதாவது ஓர் அளவில் கலந்துவிட்டிருக்கிறது. இவ்வகையில் புதுமைப்பித்தனின் கவிதை அளவில் குறைவானதே ஆனாலும் புதுக்கவிதைக்கு, அதன் வளர்ச்சிக்கு வழிகாட்டிய ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

 பாரதிதாசன் போன்றார் கற்பனையின் உச்சியில் நின்று சுவையூறிக் காதல் கவிதைகள் படைத்த சமகாலத்தில்தான் அந்த உன்னதப் படுத்தலுக்கு எதிராகக் காதலின் இன்றைய நடப்பியல் அதிர்ச்சியைப் படைத்துக் காட்டினார் புதுமைப்பித்தன்.

வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம் போட்டிடுவோம்

சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம் (புதுமைப்பித்தன்)

 என மற்றொரு மதிப்பீட்டின் சரிவையும் அவரது கவிதை சொடுக்கிக் காட்டுகின்றது.

 புதுமைப்பித்தனோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த க.நா. சுப்ரமண்யம் ‘சூறாவளி’ என்னும் பெயரில் தாம் தொடங்கிய வார இதழில் தமது முதல் கவிதையை வெளியிட்டார். அதன் பின்னர் க. நா. சு. எழுதிய கவிதைகள் சிலவற்றில் புதுமையான சில பார்வைப் பொறிகள் தென்பட்டன என்பது உண்மை. ஆனால் வடிவத்தில் பெரும்பாலும் வசன கவிதையாகவே அவை அமைந்தன. க. நா. சு. வும், சி. சு.செல்லப்பாவும் புதுக்கவிதைக்கு அளித்த பங்கீடு அவர்கள் கவிதைகள் மூலமாக அன்றி அவர்களது கட்டுரைகள் மூலமாகவே என்பதுதான் உண்மை. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., க.நா.சு., புதுமைப்பித்தன் ஆகியோர் கட்டுரைகள் மூலமாகவும் பத்திரிக்கைகளின் நிகழ்ந்த விவாதங்களில் கலந்து கொண்டும் வசனகவிதை-புதுக்கவிதை தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர். மணிக்கொடி, தினமணி, சூறாவளி, கலாமோகினி, நவசக்தி, கிராம ஊழியன், சிவாஜி, கவிக்குயில் போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளையும், அவை தொடர்பான விவாதங்களையும் கட்டுரைகளையும் வெளியிட்டன.

 இந்தக் காலக்கட்டத்தில் வசன கவிதை-புதுக்கவிதை முயற்சிகள் அதிகம் கவனிப்புக்கு உட்படாதவைகளாகவே இருந்தன. 1930ஆம் ஆண்டுகளின் இறுதியில் தொடங்கி ஈழத்திலும் சில புதுக்கவிதை முயற்சிகள் நடைபெற்றன எனவும் விரைவில் அவை ஆதரவு குன்றிச் சோர்வடைந்தன எனவும் வல்லிக்கண்ணன் தமது ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலில் எடுத்துக் காட்டுகிறார்.

 எழுத்து காலக்கட்டம் 

 தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் புதுக்கவிதை ஓர் இயக்கமாகவே உருவெடுத்துப் பெரும் வளர்ச்சி காணத் தொடங்கியது சி.சு. செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ மாத இதழ் மூலமாகத்தான். 1959 முதல் 1969 வரை வெளிவந்த இந்த இதழ்தான் புதிய இலக்கியத்துக்கும் திறனாய்வுக்கும் பெரும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தது. சில ஆண்டுகள் எழுதாமல் இருந்த ந.பிச்சமூர்த்தியுடன், தி.சொ.வேணுகோபாலன், எஸ்.வைத்தீஸ்வரன், நகுலன், பசுவய்யா, சி.மணி, தருமு சிவராமு (பிரமிள்) இரா.மீனாட்சி போன்ற புதிய கவிஞர்களும் சேர்ந்து கொண்டனர். புதுக்கவிதைகளை மட்டுமன்றிப் புதுக்கவிதை பற்றிய கட்டுரைகளையும், மேல்நாட்டுப் புதுக்கவிதைக் கோட்பாடுகளையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தது ‘எழுத்து’. T.S. எலியட், எஸ்ரா பவுண்டு, மரியான் மூர், கம்மிங்ஸ் போன்றவர்களைப் பற்றி ஆங்கிலம் தெரியாத தமிழ் வாசகர் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. எதிர்ப்புக்கிடையே புதுக்கவிதைக்கு ஆதரவும் பெருகவே புதுக்கவிதை ஓர் இயக்கமாக மாறிற்று. எழுத்து இதழில் பல்வேறு வகையான புதிய பார்வைகள் தமிழ்க் கவிதை உலகுக்கு அறிமுகம் ஆயின. தனிமனித உளவியல், மனச்சிக்கல்கள், உளைச்சல்கள் கவிதைகளில் இடம் பெற்றன. இவை அக்காலத்திலும் அதற்குப் பின்பும் எதிர்ப்புக்கு உட்பட்டன. ஆயினும் இலக்கியத்துக்குப் புதியவை என்பதாலும், எந்த உள்ளடக்கமும் இலக்கியத்தின் தொடுதலுக்கு அப்பாற்பட்டது அன்று என்பதாலும், இத்தகைய கவிதைகள் ஏற்பும் பெற்றன. மனம்-அகம் தொடர்பான இக்கவிதைகளைப் புதுவகையான ‘அகத்துறைக் கவிதைகள்’ எனப் புதுக்கவிதையாளர் குறிப்பிட்டனர்.

 புதுக்கவிதையின் வளர்ச்சி

 உளவியல் அறிஞர் பிராய்டின் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் உளவியல் துறையைத் தாண்டி இலக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தின. மேனாட்டு இலக்கியம் மட்டுமன்றித் தமிழ் இலக்கியமும் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு உண்மைகளின் தாக்கம் பெற்றது. சி.சு.செல்லப்பா ‘புதுக்குரல்கள்’ முன்னுரையில் "மென்மையானதும் சிக்கலானதும், கூட்டுக் கலப்பானதும், திட்டமான எண்ணத்துக்கு உருவாகாமல் பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களைச் சொல்லும் முயற்சி, கணக்கற்ற அணுக்களைப் போல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் மனதுக்குள் பொழியும் மனப்பதிவுகளையும் மாறுபடும் இனம் தெரியாத ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கையும் தெரிவிக்கும் முயற்சி" என அகவுலகக் கவிதைகளின் போக்கைத் தெளிவுபடுத்துகிறார். எழுத்து இதழில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் திரட்டி 1962இல் ‘புதுக்குரல்கள்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார் சி.சு.செல்லப்பா. இதுவே தமிழின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பு ஆகும்.

‘எழுத்து’ கவிதை இயக்கத்திலிருந்துதான் புதுக்கவிதையை இனம் காட்டும் பல்வேறு கருத்துக்கள் தோன்றி விரிந்தன. கவிதை சொற்களில் இல்லை. ஒலிநயத்தில் இல்லை. கருத்திலே மடைதிறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக் காட்டும் பேருண்மையிலே கவிதை பொதிந்து கிடக்கின்றது. கவிதை வரலாறாக, மதத்தின் குரலாக இருந்திருக்கிறது. மனத்தின் குரலாக அதிகம் இருந்ததில்லை. மனத்தின் நுட்பமான அசைவுகளை வெளியிட்டால் சரியான அகத்துறை காணும் - என்று பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் அமைப்பு உள்ளடக்கம் குறித்த தமது கருத்தோட்டத்தை வெளிப்படுத்தினார். "ஒரு அப்பட்டமான வெளியீடும் உள்ளடக்கப் புதுமையுமே புதுக்கவிதை. ஓசையினால் வெளிப்படும் உணர்ச்சியைக் களைந்து சொல்லால் வெளிப்படும் உணர்ச்சியோடு புதுக்கவிதை தோன்றியிருக்கிறது" இவை பிரமிள் கூறியவை. க.நா.சுப்பிரமணியம் தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு மீள் பார்வையில் பார்த்து ஒரு முக்கியமான கருத்தைத் தெரிவித்தார். "புதுசாக இன்றைய வாழ்க்கைச் சிக்கலும் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும், இன்றைய புதுமைகள் எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர் நடையும், அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை அடிப்படைச் செய்யுள் வேகமும், எல்லாவற்றிற்கும் மேலாக, இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக்கிடக்கின்றன" (மயன்கவிதைகள், முன்னுரை, ப.14). இந்த இறுதிச் சொற்றொடர் கவனிக்கத் தக்கது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் பழையதாகிய சங்க இலக்கியத்தின் நெகிழ்வான ஆசிரியப்பா அமைப்பும், ஆற்றலும், அலங்காரமில்லாத அழகும், எளிய நேரிய வெளிப்பாடும் புதுக்கவிதையாளர்க்கு மிகவும் உவப்பானவையாக இருந்தன. புதுக்கவிதையின் வளர்ச்சிப் போக்கில் மிகப்பழைய சங்க இலக்கியத்தின் மீதான புதிய நாட்டம் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

 புதுக்கவிதை இதழ்கள்

 க.நா.சு.வின் ‘இலக்கிய வட்டம்’, சேலத்திலிருந்து வெளிவந்த ‘நடை’, ‘கணையாழி’ இலங்கை இதழ் ‘மல்லிகை’ போன்றவை புதுக்கவிதை வளர உதவியவை. 1970இல் தோன்றிய ‘கசடதபற’ இதழ் புதுக்கவிதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியது. இடதுசாரிக் கருத்துகள் கொண்ட கவிதைகளுக்குத் ‘தாமரை’ இடமளித்தது. இடதுசாரிக் கண்ணோட்டத்தை கவிதைக் கோட்பாடாகக் கொண்டு ‘வானம்பாடி’ எனும் விலையிலாக் கவிமடல் 1971இல் தோன்றியது; இயக்கமாகவே வளர்ந்தது. மேலும் ‘ஞானரதம்’, ‘அஃ’, ‘சதங்கை’, ‘தெறிகள்’ போன்ற பல இதழ்கள் மூலம் புதுக்கவிஞர்கள் பலர் ஊக்கம் பெற்று எழுதினர். ஞானக்கூத்தன், கலாப்ரியா, நா. காமராசன், சிற்பி, இன்குலாப், மேத்தா, புவியரசு, தமிழன்பன், மீரா போன்ற பலப்பல கவிஞர்களின் கவிதைகளால் தமிழ்ப் புதுக்கவிதை உலகம் விரிவுகண்டது, இதழ் அல்லது இயக்கம் சாராத அப்துல் ரகுமான், அபி போன்றவர்களின் கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்தன. 1980களுக்குப் பின்னர் ‘மீட்சி’, ‘கனவு’, ‘விருட்சம்’, ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ போன்ற பல இதழ்கள் புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்காற்றின. கவிஞர்கள், எண்ணிக்கையும் கவிதைத் தொகுப்புகளின் எண்ணிக்கையும் பெருகின. ஆத்மாநாம், தேவதேவன், சுகந்தி சுப்ரமணியன், பிரம்மராஜன், பழமலை, சுகுமாரன், எம்.யுவன், யூமாவாசுகி, குட்டிரேவதி, மனுஷ்யபுத்திரன், மாலதி மைத்ரி போன்ற தனித்தன்மை மிக்க கவிதைப் படைப்பாளிகள் பலர் தமிழ்ப் புதுக்கவிதையை வளப்படுத்தியவர்கள் ஆவர். ஈழத்தைச் சார்ந்த வ.ஐ.ச. ஜெயபாலன், சிவசேகரம், சேரன், சோலைக்கிளி, மு. பொன்னம்பலம், அ. யேசுராசா, எம். ஏ. நுஃமான் எனப் பல கவிஞர்கள் புதுக்கவிதையில் சாதனை படைத்துள்ளனர்.

 தலித்தியக் கவிதை 

 விளிம்புநிலை மக்கள் காலங்காலமாக மேல்சாதியினரால் அனுபவித்துவரும் அடக்குமுறைகள், அவமதிப்புகளுக்கு எதிரான போர்க்குரலாக, விடுதலைக்கான எதிர்ப்புக்குரலாக தலித்துகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பை அவர்களின் எழுத்துக்களில் வெளிப்படுத்தினர். இராஜமுருகு பாண்டியன், என்.டி.ராஜ்குமார், ம.மதிவண்ணன், விழி.பா.இதயவேந்தன், அபிமானை, அன்பாதவன் போன்றவர்கள் இவ்வகையான கவிதைகளை எழுதி தலித் இலக்கியத்தை வளர்த்தெடுத்தன.

 பெண்ணியக் கவிதை 

 பெண்ணியம் என்பது இன்று சமூக, அரசியல், இலக்கியத் துறைகளில் நன்கு அறிமுகமானது. பாரதியே பெண்ணியத்தைத் தொடக்கி வைத்தவர் என்பதை நாம் அறிவோம். இரா.மீனாட்சி, சுகந்தி சுப்ரமணியன் ஆகிய இரு கவிஞர்களும் பெண்ணிலை வாதத்தைச் சற்று அடங்கிய தொனியில் எழுதினர். அவர்களுக்குப் பின் இப்போது எழுதிவரும் பெண் கவிஞர்களான சல்மா, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, லீனா மணிமேகலை, கனிமொழி போன்ற பலரும் பெண்ணியத்தின் பரிமாணங்களை விரிவு செய்துள்ளனர். ஒடுக்கப்படும் ஏழைப் பெண், குடும்ப பாரத்துள் அழுத்தப்படும் நடுத்தர வர்க்கப் பெண் ஆகியோரது வாழ்வுரிமை, பாலியல் ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், கற்பு என்பதைப் பெண்ணின் சிறையாக வடிவப்படுத்திய ஆணாதிக்கத்திற்கு எதிரான குரல், பெண்ணின் உடலியல் சார்ந்த இயல்பான வேட்கைகள் போன்றவை மனத்தடையின்றி இவர்களின் கவிதைகளில் வெளிப்படுகின்றன. இக்கவிதைகளின் கூற்றுமுறையைப் ‘பெண் மொழி’ என்று கூறுகின்றனர். மனத்தடையற்ற இவ்வித வெளிப்பாடுகள் சில கடுமையான விமரிசனங்களுக்கு ஆளாவதும் காண்கிறோம்.

முடிவுரை

புதுக்கவிதைக்குப் பல முகங்கள் உண்டு; பல குரல்கள் உண்டு. புதுக்கவிதை கவிஞனின் வாழ்க்கைப் பின்னணி, அவனது ஆளுமை சார்ந்தே எழுதப்படுகிறது. இது இன்று ஹைக்கூ, லிமரைக், லிமரைக்கூ, சென்ரியு என பல வடிவங்களில் வளர்ச்சிப்பெற்றுள்ளது.

 

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை ஆசிரியர்கள் (எம்.ஏ. பாடத்திட்டம்)

தமிழ்நாவல் தோற்றமும் வளர்ச்சியும்