திருக்குறள்

காலமறிதல்

காலம் அவசியம்

§  தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

§  காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

§  செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

ஞாலம் கைகூடும்

§  ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

§  பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

§  ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

§  தம் பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

காலமறிந்து செய்ய வேண்டும்

§  பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

§  அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

§  ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்திருக்க வேண்டும். செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடிக்க வேண்டும்.


 

சுற்றந் தழால்

சுற்றத்தாரின் பண்பு

§  ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

§  ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

§  சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.

சுற்றத்தின் பயன்

§  தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.

§  ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.

§  ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

காக்கையின் பண்பு

§  காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

§  சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

§  முன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

§  ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தான் என்றால், ஆட்சியாளன் பொறுத்திருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


 

கண்ணோட்டம்

பூமிக்கு பாரமானவர்கள்

§  கண்ணோட்டம் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

§  மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமேயாகும்.

§  பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?

கண்ணிற்கு அணிகலன்

§  வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?

§  ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

§  கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

§  கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

உலகமே சொந்தம்

§  தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.

§  தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

§  எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.


 

நாலடியார்

ஈகை

மறுமைக்கு உரியவர்

§  பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு, மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்

§  எதிரிலேயே இறக்கும் நாளும், வெறுக்கத்தக்க முதுமைப் பருவமும் உள்ளன. அவை அல்லாமல் வலிமையை அழிக்கும் நோய்களும் உண்டாகியிருக்கின்றன. ஆதலால் பொருள் உள்ள காலத்தில் மேலும் அதனைச் சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்! பொருளை இறுகப் பிடித்துக்கொண்டிராதீர்! பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள்! சிறிதும் ஒளிக்காதீர்!

பிறர் துன்பம் களைவர்

§  பிறருக்குக் கொடுத்துத் தானும் அனுபவித்தாலும் பொருள் சேரும் காலத்தில் சேரும். நல்வினை தொலைந்தபோது, அப் பொருளை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது நீங்கிவிடும். இந்த உண்மையை அறியாதவர், வறுமையால் வாடி வருந்தித் தம் உதவி நாடி வந்தவர்கள் துயரைப் போக்க மாட்டார்கள். அறிந்தவர்கள் பிறர் துன்பம் களைவர் என்பது கருத்து.

ஒன்றும் உதவாது இருந்தவர்கள்

§  ஒரு சிறிய அரிசியின் அளவாவது - நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர்.

பிறரிடம் கேட்காமல் இருத்தல் நன்று

§  மறுமையில் துறக்க வாழ்வும் இம்மையில் புகழும் நோக்கி ஏற்ற வகையில், முடிந்த அளவு கொடுக்க வேண்டும். வறுமை காரணமாக அவ்வாறு தர முடியாவிட்டாலும், பிறரிடம் சென்று பிச்சை எடுக்காமல் இருத்தல், கொடுப்பதைவிட இரண்டு மடங்கு நல்லது. வறுமையால் பிறருக்கு ஒன்றும் தர முடியாவிட்டாலும் பிறரிடம் பிச்சை கேட்காமல் இருத்தல் மிக நன்று.

Comments

Popular posts from this blog

புதுக்கவிதை ஆசிரியர்கள் (எம்.ஏ. பாடத்திட்டம்)

தமிழ்நாவல் தோற்றமும் வளர்ச்சியும்