புதுக்கவிதை வகைகள்
ஐக்கூ: (துளிப்பா) ஜப்பான் நாட்டு சென் மதத்தினர் பாடிய ஹொக்கு என்ற ஒரு வகையே ஹைக்கு, ஐக்கூ என்று நாம் நாட்டிலும் பரவியது. இது மூன்று அடிகளால் பாடும் குறுங்கவிதையாகும். இதன் மூன்றாவது அடி, முதல் இரண்டு அடிகளின் பொருளை அதிரடியாகத் திசை திருப்பும்; சாட்டையடி போல் மனதை இறுக்கும். ஐக்கூ கவிதைகளுக்கு வயது வரம்பு இன்றி அனைத்துத் தரப்பினர்களிலும் வாசகர்கள் உண்டு. கவிதை ரசிகர்கள் என்ற சின்ன வட்டத்தையும் தாண்டி பரவலாக பலராலும் படிக்கப்படும் வடிவம்தான் ஐக்கூ.
ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5, 7, 5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது.
1. உழுதுவந்த களைப்பில்
படுக்கும் மாடுகள்
காயம் தேடும் காக்கை
2. கல்லாகவே இருந்துவிடுகிறேன்
மிதித்து விடாதே
சுற்றிலும் இந்திரன்கள்
லிமெரிக்: ஆங்கிலத்தில் ஐந்து அடிகளில், யாப்பு முறையில் செய்யப்பட்ட கவிதையை லிமெரிக் என்று அழைப்பர். தாமசுமூர் என்பவரால் 18 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இக்கவிதை. பாலியல் சார்ந்த நிகழ்வுகளைக் கிண்டலாய் விரசமாய்க் கூறுவதே இக்கவிதையின் பண்பாகக் கொண்டனர். தமிழில் முதலில் இவ்வடிவத்தை ஈழத்து மகாகவி என்பவர் குறும்பா எனும் பெயரால் அறிமுகப்படுத்துகிறார். இவர் ஆங்கிலத்தில் உள்ள வடிவமைப்பையும் ஓசை ஒழங்கையும் பின்பற்றியுள்ளார். ‘குறும்பாவால் தமிழ்க்கவிதை நகைச்சுவை ஆழமும் அகலமும் இறுக்கமும் இலகுவும் பெற்று ஒரு புதிய உச்சத்தை அடைய வழிப்பிறக்கின்றது’ என்று எஸ்.பொன்னுதுரை குறிப்பிடுகிறார்.
முத்தெடுக்க மூழ்குகின்றான் காலன்
சத்தமின்றி வந்தவனின்
கைத்தலத்தில பத்து முகத்தைப்
பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்
மகாகவியைத் தொடர்ந்து கோவேந்தன் என்பவரம் குறும்பாக்களைப் படைத்துள்ளார். இவர் வடிவமைப்பில் சில மாற்றம் செய்து ஆறடிக் குறும்பாக்களையும் எழுதியுள்ளார். தமிழ்க்கவிஞர்கள் ஐக்கூ, சென்ரியு எனும் இலக்கிய வகைமைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தியது போல் குறும்பாக்களின் மீது கவனத்தைச் செலுத்தவில்லை என்றே கூறலாம்.
லிமரைக்கூ: (இயைபுத் துளிப்பா) மூன்றடிக் கவிதையில் முதலடியின் ஈற்றுச் சீரும் மூன்றாமடியின் ஈற்றுச் சீரும் இயைபுத்தொடையமையப் பாடப்படுவது இயைபுத் துளிப்பா அல்லது லிமரைக்கூ என்பர். இதன் இரண்டாமடி ஏனைய இரண்டடியையும் விட நீண்டிருத்தல் சிறப்பு. ஈரோடு தமிழன்பனின் சென்னிமலை கிளியோபாத்ராக்கள் என்னும் நூல் இத்தன்மைத்தாகும்.
1. மணக்கும் மதுரைமல்லி
வாங்கிப் போனான் காதலிக்கு
மனைவி பேரைச் சொல்லி
2. வறுமையால் கல்லைக்கட்டி
விழுந்தப் பின் தெரிந்தது
கிணற்றுக்குள் தங்கக்கட்டி
சென்ரியு: (நகைத் துளிப்பா) துளிப்பாவை அடுத்துச் சிறந்திருப்பது நகைத் துளிப்பாவாகும். ஜப்பானின் சென்ரியு என்னும் கவிதை வகையே தமிழில் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஐக்கூவின் அங்கத வடிவம் சென்ரியு. ஐக்கூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில், மக்கள், பொருள், சம்பவங்கள் ஆகியவற்றின் மீதான பார்வையைக் குறிப்பது சென்ரியுவாகும். 5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும்.
தமிழில் ஹைகூ பரவிய அளவுக்கு சென்ரியு பரவவில்லை என்ற உண்மை ஒத்துக்கொள்ளப்பட வேண்டியதே. தனித்தனிக் கவிதைகளாகப் பலர் எழுதி வருகின்றனர். நூல் தொகுப்பாக வெளிவந்திருப்பது மிகச் சிலவே. 2001 ஆம் அண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன் முழுக்க முழுக்க சென்ரியூ கவிதைகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டார். ஒரு வண்டி சென்ரியு என்னும் இந்நூலே தமிழில் முதல் சென்ரியு கவிதை நூலாகும்.
1 சட்டம் ஒழுங்கைக்
காப்பாற்ற முடியவில்லை
சட்டசபையில்
2. அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல்
சானெட்: மேல்நாட்டுக் கவிதைகளில் சானெட் என்பது புகழ்மிக்க யாப்பு வகைக்கு உட்பட்ட கவிதையாகத் திகழ்கிறது. இதைப் பாரதி 1904&ல் சுதேசமித்திரன் இதழ்வழித் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார். பதினான்கு அடி எனும் வடிவ அமைப்பை மட்டுமே பின்பற்றி எழுதப்படும் இக்கவிதையைப் பரிதிமாற்கலைஞரும் ‘தனிப்பாசுரத்தொகை’ எனும் குறுநூலில் படைத்துள்ளார். பெ.தூரன் மின்னல் பூ எனும் கவிதைத் தொகுதியில் வடிவ மாற்றங்களுடன் சானெட் கவிதை படைத்துள்ளதையும் காணமுடிகிறது.
Comments
Post a Comment