மரபுக் கவிஞர்கள்

சுப்பிரமணிய பாரதியார்

பாரதியார் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்த்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். இவர், 1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் நாள் சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் மகனாகப் பிறந்தார். பாரதி சுப்பையா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பாரதி, தனது 11ஆம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

தமிழில் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளராக விளங்கினார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், வ.வே.சு. ஐயர், வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனைப் பாராட்டி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசபையால் வழங்கப்பட்டது.

குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்றும் இவரின் முக்கியமானப் படைப்புகளாகும்.

பாரதிதாசன்

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) புதுச்சேரியில் பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 1920&ம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே அதிகம். தமது பதினாறாம் வயதிலியே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருந்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன், ‘எங்கெங்குக் காணினும் சக்தியடா’ என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே ஸ்ரீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார். தந்தைப் பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடையப படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

கவிஞர் 21.4.64இல் இயற்கை எய்தினார். மன்னர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண் குழந்தைகளும் இவருக்கு உள்ளனர்.

வாணிதாசன்

வாணிதாசன் புதுவையைச் சேர்ந்த தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். புதுவையை அடுத்த வில்லியனூரில் 22-07-1915இல் அரங்க திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்கிற எத்திராசலு என்பதாகும். இவர் 'ரமி' என்னும் புனைப்பெயரும் கொண்டவர்.

இவர், பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பயின்றவர். அத்தொடக்கக் கல்வியே பாப்புனையும் தமிழுணர்விற்கும் தொடக்கமாயிற்று. இவர்தம் பாடல்கள், சாகித்திய அகாதமி வெளியிட்ட 'தமிழ்க் கவிதைக் களஞ்சியம்' என்ற நூலிலும் தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட புதுத்தமிழ்க் கவிமலர்கள் என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. ரஷ்சியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் பிரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றவர். ‘தமிழ்-&பிரெஞ்சு கையகர முதலி’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். பிரெஞ்சு குடியரசுத்தலைவர் இவருக்கு 'செவாலியர்' என்ற விருதினை வழங்கியுள்ளார். மேலும் ‘கவிஞரேறு’, ‘பாவலர் மணி’ முதலிய பட்டங்களும் வாணிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர். 34 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

பாரதிதாசன் அடியொட்டிப் பாடிய கவிஞர்களை அக்காலத்தே வெளிவந்த 'பொன்னி' இதழ், 'பாரதிதாசன் பரம்பரை' என்று தலைப்பிட்டு அறிமுகப்படுத்தியது. பாரதிதாசன் பரம்பரையினருள் வாணிதாசன் குறிப்பிடத்தக்கவர். "தமிழச்சி", "கொடிமுல்லை" ஆகிய சிறு காப்பியங்களையும், 'தொடுவானம்', 'எழிலொவியம்', 'குழந்தை இலக்கியம்' ஆகிய கவிதை நூல்களை வழங்கியுள்ளார். எனினும் 'வாணிதாசன் கவிதைகள்' என்னும் தொகுப்பே பெரும் புகழ் பெற்றது.

இயற்கைப் புனைவு இவருடைய பாடல்களில் சிறந்து விளங்குவதைக் காணலாம். எனவே இவரை 'தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்' என்று பாராட்டுகின்றனர். கவிஞரேறு வாணிதாசன் 07-08-1974இல் இயற்கை எய்தினார். கவிஞரேறு வாணிதாசனுடைய தமிழ்த்தொண்டைப் பாராட்டித் தமிழக அரசு இவர் குடும்பத்துக்கு 10,000 ரூ பரிசு வழங்கியுள்ளது. இவர் பெயரால் சேலிய மேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.

அழ. வள்ளியப்பா

அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000-க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீஸ்வரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

1940ஆம் ஆண்டில் வாழ்வாதாரம் தேடி வை.கோவிந்தன்னின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி.ஜ.ரங்கராஜனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். ‘ஆளுக்குப் பாதி’ என்னும் தம் முதல் கதையை எழுதினார்.

சக்தியில் பணியாற்றியபோது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.

1941இல் சக்தியில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியில் இருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982இல் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தார்.

வங்கி பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு பத்திரிகைகளுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983இல் இருந்து 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.

குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950இல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார்.

 வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி ‘மலரும் உள்ளம்’ 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1954 இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961 இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். "சிரிக்கும் பூக்கள்" என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், "குழந்தைக் கவிஞர்" என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினர். நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.

அழ. வள்ளியப்பாவின் நூல்களுள் சில:

§  மலரும் உள்ளம்

§  பாப்பாவுக்குப் பாட்டு

§  சின்னஞ்சிறு பாடல்கள்

§  சுதந்திரம் பிறந்த கதை

§  ஈசாப் கதைப் பாடல்கள்

§  ரோஜாச் செடி

§  உமாவின் பூனைக் குட்டி

§  அம்மாவும் அத்தையும்

§  மணிக்குமணி

§  மலரும் உள்ளம்

§  கதை சொன்னவர் கதை

§  மூன்று பரிசுகள்

§  எங்கள் கதையைக் கேளுங்கள்

§  நான்கு நண்பர்கள்

§  பர்மாரமணி

§  எங்கள் பாட்டி

§  மிருகங்களுடன் மூன்று மணி

§  நல்ல நண்பர்கள்

§  பாட்டிலே காந்தி கதை

§  குதிரைச் சவாரி

§  நேரு தந்த பொம்மை

§  நீலாமாலா

§  பாடிப் பணிவோம்

§  வாழ்க்கை விநோதம்

§  சின்னஞ்சிறு வயதில்

§  பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.

குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர். 1982&ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

கண்ணதாசன்

கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி என்ற ஊரில் ஜூன் 24, 1927&ல் பிறந்தார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

படைப்புகள்

§  இயேசு காவியம்

§  அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)

§  திரைப்படப் பாடல்கள்

§  மாங்கனி

கவிதை நூல்கள்

§  கண்ணதாசன் கவிதைகள் (6 பாகங்கள்)

§  பாடிக்கொடுத்த மங்களங்கள்

§  கவிதாஞ்சலி

§  தாய்ப்பாவை

§  ஸ்ரீகிருஷ்ண கவசம்

§  அவளுக்கு ஒரு பாடல்

§  சுருதி சேராத ராகங்கள்

§  முற்றுப்பெறாத காவியங்கள்

§  பஜகோவிந்தம்

§  கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்

§  அவள் ஒரு இந்துப் பெண்

§  சிவப்புக்கல் மூக்குத்தி

§  ரத்த புஷ்பங்கள்

§  சுவர்ணா சரஸ்வதி

§  நடந்த கதை

§  மிசா

§  சுருதி சேராத ராகங்கள்

§  முப்பது நாளும் பவுர்ணமி

§  அரங்கமும் அந்தரங்கமும்

§  ஆயிரம் தீவு அங்கயர்க்கண்ணி

§  தெய்வத் திருமணங்கள்

§  ஆயிரங்கால் மண்டபம்

§  காதல் கொண்ட தென்னாடு

§  அதைவிட ரகசியம்

§  ஒரு கவிஞனின் கதை

§  சிங்காரி பார்த்த சென்னை

§  வேலங்காட்டியூர் விழா

§  விளக்கு மட்டுமா சிவப்பு

§  வனவாசம்

§  அத்வைத ரகசியம்

§  பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்

§  எனது வசந்த காலங்கள்

§  எனது சுயசரிதம்

§  வனவாசம்

கட்டுரைகள்

§        கடைசிப்பக்கம்

§        போய் வருகிறேன்

§        அந்தி, சந்தி, அர்த்தஜாமம்

§        நான் பார்த்த அரசியல்

§        எண்ணங்கள்

§        தாயகங்கள்

§        வாழ்க்கை என்னும் சோலையிலே

§        குடும்பசுகம்

§        ஞானாம்பிகா

§        ராகமாலிகா

§        இலக்கியத்தில் காதல்

§        தோட்டத்து மலர்கள்

§        இலக்கிய யுத்தங்கள்

§        போய் வருகிறேன்

நாடகங்கள்

§       அனார்கலி

§       சிவகங்கைச்சீமை

§       ராஜ தண்டனை

இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். சேரமான் காதலி என்ற புதினத்துக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டடோபர் 17 இறந்தார். தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.

சுரதா

சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் ஊரில் நவம்பர் 23, 1921இல் பிறந்தவர். பெற்றோர் திருவேங்கடம், சண்பகம் அம்மையார் ஆவர். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.

1941 சனவரி 14இல் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கியிருந்து அவரது கவிதைப் பணிக்குத் துணை நின்றுள்ளார். பாவேந்தர் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.

சுரதாவின் சொல்லடா என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்த்தது. பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந் நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.

நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த தலைவன் இதழின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார். கவிஞர் திருலோகசீதாராமின் சிவாஜி இதழில் தொடக்க காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.ச.கிருட்டிணமூர்த்தி என்பவர் இவரைத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். 1944 ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்னும் திரைப்படத்திற்கு முதன்முதல் உரையாடல் எழுதினார். மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு', மற்றும் 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை. 100-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார்.

சுரதாவின் முதல் நூல் சாவின் முத்தம்; இதனை வி.ஆர்.எம்.செட்டியார் என்பவர் 1946 மார்ச்சு மாதம் வெளியிட்டார். 1956 இல் பட்டத்தரசி என்ற சிறு காவிய நூலை வெளியிட்டார். 1954 இல் கலைஞர் கருணாநிதியின் முரசொலி இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தார். 1955 இல் காவியம் என்ற வார இதழைத் தொடங்கினார். இவ்விதழைத் தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனக் கவிதை வளர்ச்சிக்குப் பல இதழ்களை வெளியிட்டார்.

1971 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் இதழில் சுரதா திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னாளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டு சுவரும் சுண்ணாம்பும் என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது (1974).

தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு.

பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966&இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார்.

பெற்ற சிறப்புகள்

  • 1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
  • 1972 இல் தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 1978 இல் ம.கோ.இரா. தலைமையில் அமைந்த அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • 1982 இல் சுரதாவின் கவிதைப் பணிகளைப் பாராட்டிக் குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடந்த விழாவில் கவியரசர் பட்டம் வழங்கப்பட்டது.
  • 1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
  • 1990 இல் கேரளாவில் மகாகவி குமரன் ஆசான் விருது சுரதாவுக்குக் கிடைத்தது.
  • சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ரூபா ஒரு இலட்சம் இராசராசன் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் தன்னுடைய 84ஆம் வயதில் 20.06.2006 இல் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். சுரதாவுக்குச் சுலோசனா என்ற மனைவியும், கல்லாடன் என்ற ஒரே மகனும் உள்ளனர்.

இவரது நூல்கள்

§        தேன்மழை (கவிதைத் தொகுப்பு, 1986)

§        துறைமுகம் (பாடல் தொகுப்பு, 1976)

§        சிரிப்பின் நிழல் (பாடல் தொகுப்பு)

§        சுவரும் சுண்ணாம்பும் (பாடல் தொகுப்பு, 1974)

§        அமுதும் தேனும், 1983

§        பாரதிதாசன் பரம்பரை (தொ.ஆ), 1991

§        வினாக்களும் சுரதாவின் விடைகளும்

முடியரசன்  

கவியரசு முடியரசன் தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கப்பராயலு-சீதாலக்ஷ்மி என்பார்க்கு
07-10-1920இல் பிறந்தவர். துரைராசு என்ற இவரது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். சடங்குகளை மறுப்பவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். காரைக்குடி மீ. சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.

பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம் என்னும் காப்பியங்கள்; முடியரசன் கவிதைகள் என்ற கவிதை நூல் இவரது படைப்புகளாகும்.

இவரது கவிதைகளைச் சாகித்திய அகாடமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. பூங்கொடி என்ற காவியம் 1966-இல் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது. பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. டிசம்பர் 3, 1998&ல் இவர் இயற்கை எய்தினார்.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, தற்போதைய நாமக்கல் மாவட்டம், மோகனூரில் அம்மணிம்மாள், வெங்கடராமன் ஆகியோருக்கு அக்டடோபர் 10, 1888இல் மகனாகப் பிறந்தார்.  தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். அரசவைக் கவிஞர் பட்டமும் `பத்மபுக்ஷன் பட்டமும் பெற்றவர்.

‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விதுதளைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.

            கத்தி யின்றி ரத்த மின்றி

          யுத்த மொன்று வருகுது

          சத்தி யத்தின் நித்தி யத்தை

          நம்பும் யாரும் சேருவீர்

என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

இவரது நூல்கள்

§      மலைக்கள்ளன்

§      என்கதை

§      அவனும் அவளும்

§      சங்கொலி

 கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்து போற்றியது. ஆகஸ்ட் 24, 1972இல் இவர் மறைந்தார்.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவில்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது.

சுத்தானந்த பாரதியார்

சுத்தானந்த பாரதியார் கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர். கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேட நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவர். சுத்தானந்தர் தமிழ் நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

 ராஜராஜன் விருது: 1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜ ராஜன் விருதைப் (மாமன்னன் இராசராசன் படப்பிலக்கியப் பெரும் பரிசு) பெற்றார் கவியோகி சுத்தானந்த பாரதி. அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான ‘பாரத சக்தி மகாகாவியம்’ அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய காவியம் ஆகும்.

இவர் ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக மே 11, 1897ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தார். அவரின் பிள்ளை திருநாமம் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் சுத்தானந்தர், 'ஆயுட்காவியம்' என அப்பெரியாரே குறிப்பிட்டுக் கொள்ளும் 'பாரத சக்தி' மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை, ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில், சிறப்பாக தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று ஒன்பதாம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968 ஆம் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் தெய்வநெறி கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

சோவியத் கீதாஞ்சலி என்னும் நூல் சோவியத் ஒன்றியத்தின் சோவியத் நாடு நேரு நினைவுப் பரிசு பெற்றது. இவர் மார்ச் 7, 1990இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

அ. சீனிவாச ராகவன்

அ.சீ.ரா என்றழைக்கப்பட்ட அ. சீனிவாச ராகவன் (ஜனவரி 5, 1975) குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர்.

 சீனிவாச ராகவன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்டியூரில் அக்டடோபர் 23, 1905இல் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை நாகப்பட்டினத்திலும், கல்லூரிப் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும் முடித்தார். சிறிது காலம் அதே கல்லூரியிலும் சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், சென்னை புனித சேவியர் கல்லூரியிலும் ஆங்கிலப் பேராசிரியாராக பணியாற்றினார். 1951-1969இல் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார்.

1968இல் இவரது வெள்ளைப் பறவை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2005இல் இவரது அனைத்து படைப்புகளும் ஒரே தொகுப்பில் வெளியிடப்பட்டன.

இவரது படைப்புகள்

§      வெள்ளைப் பறவை (கவிதை தொகுப்பு)

§      நிகும்பலை

§      அவன் அமரன்

§      கௌதமி

§      உதய கன்னி (நாடகம்)

§      மேல் காற்று

§      இலக்கிய மலர்கள்

§      காவிய அரங்கில்

§      குருதேவரின் குரல்

§      புது மெருகு

§      பாரதியின் குரல்

§      கம்பனில் இருந்து சில இதழ்கள்

§      நம்மாழ்வார்

பெரியசாமி தூரன்

பெரியசாமி தூரன் நாட்டுப்பற்றாளர், தமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கருநாடக இசை வல்லுனர் ஆவார்.

பழனிவேலப்ப கவுண்டருக்கும் பாவாத்தாளுக்கும் மகனாக 1908 ஆம் ஆண்டு, செப்டம்பர் 26இல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகிலுள்ள மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பிறந்தார். கொங்கு நாட்டவரின் வரலாற்று நாயகர்களான அண்ணன்மார், பொன்னர்-சங்கர் இருவரும் பெரியசாமி, சின்னச்சாமி என்று அழைக்கப்பட்டனர். மேழிப்பள்ளி பொன்னர் நினைவால் இவருக்குப் பெரியசாமி என்று பெயர் வைக்கப்பட்டது. கொங்கு வேளாளரில் இவர் ‘தூரன்’ குலம் சார்ந்தவர் ஆனதால் ‘தூரன்’ என்று பெயரில் இணைத்துக் கொண்டார்.

இளம் வயதிலேயே தாயாரை இழந்த தூரன் செம்மாண்டம்பாளையம் பாட்டி வீட்டில் வளர்ந்தார். மொடக்குறிச்சியில் தொடக்கக்கல்வி முடித்து ஈரோடு மாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பவரை படித்தார். தமிழாசிரியர் திருமலைசாமி அய்யங்கார் பாடம் கற்பிக்கும் நேரம் அல்லாமல் மற்ற நேரமும் மாணவர்களுக்குத் தமிழ் அறிவை ஊட்டுபவர். ‘அவரால் எனக்குத் தமிழில் பற்றும் கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது,’ என்று கூறியுள்ளார் தூரன்.

மே 1, 1939இல் காளியம்மாளை மணம் செய்துகொண்ட தூரனுக்கு, சாரதாமணி, வசந்தா, விஜயலட்சுமி ஆகிய பெண்மக்களும், சுதந்திரக்குமார் என்ற மகனும் உள்ளனர்.

சென்னையில் கல்லூரிக் கல்வி கற்கும்போதே சக மானவர்களுடன் இணைந்து 'வனமலர்ச் சங்கம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்து பாரதி பாடல்களைப் பரப்பவும், தேசியப் போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் "பித்தன்" என்ற மாத இதழை நடத்தத் தூரன் காரணமாக இருந்தார்.

இவரது நூல்கள்

§      மாவிளக்கு

§      உரிமைப் பெண்

§      காலிங்கராயன் கொடை

§      தங்கச்சங்கிலி, பிள்ளைவரம்

§      தூரன் எழுத்தோவியங்கள்

§      இளந்தமிழா

§      மின்னல்பூ

§      நிலாப்பிஞ்சு

§      தூரன் கவிதைகள்

§      பட்டிப்பறவை

கட்டுரைத் தொகுப்புகள்

§      தேன்சிட்டு

§      பூவின் சிரிப்பு

§      காட்டுவழிதனிலே

இசை நூல்கள்

§      கீர்த்தனை அமுதம்

§      இசைமணி மஞ்சரி

§      முருகன் அருள்மணிமாலை

§      நவமணி இசைமாலை

§      இசைமணி மாலை

§      கீர்த்தனை மஞ்சரி

1980 ஆம் ஆண்டு கடுமையான வாத நோயால் வாடியவர் 1987ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் மறைந்தார்.

இந்திய அரசின் ‘பத்மபூஷண்’, தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும் பெற்றுள்ளார். தமிழக அரசு அவருடைய நூல்களையெல்லாம் நாட்டுடைமையாக்கியுள்ளது. 2008இல் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தனது ஆண்டு விழாவை பெ.தூரன் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடியது.


Comments

Popular posts from this blog

புதுக்கவிதை ஆசிரியர்கள் (எம்.ஏ. பாடத்திட்டம்)

தமிழ்நாவல் தோற்றமும் வளர்ச்சியும்