பார்த்திபன் கனவு
1
கல்கி
கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக வெளியிடப்பட்டு பின்பு புத்தககமாக வெளியிடப்பட்ட
புதினம் பார்த்திபன் கனவு. இதில் நரசிம்மவர்மன், பரஞ்சோதி முனிவர், யுவாங்
சுவாங் போன்ற வரலாற்று கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த
கதையின் கருவாக இருப்பது தந்தையின் கனவை நிறைவேற்றுதல் மற்றும் சில குறிப்புகளும் கதையில் கருவுடன் பயணிக்கின்றன
அவை:
§ தாய் நாட்டை
மீட்டல்
§ கொடுத்த வாக்கை நிறைவேற்ற தவிக்கும் தாய்
§ காதலியைக் கைப்பிடித்தல்
§ மூடநம்பிக்கையும்
போலி சாமியாரும்
என
பல சுவாரசியமான சம்பவங்களை கதையில் இணைத்துள்ளார் கல்கி.
ஒரு
காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது.
பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன்
தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று
அறிவூட்டுகின்றான்.
பல்லவ
மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன்
எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம்
பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி
பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடையிடையே
சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ
வேசத்தில் வந்தவர் யார்? இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும்
கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர்
எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர்,
வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே
வதம் செய்த சேனாதிபதியாவார்.
கதை
நகரும் இடத்தையும் அந்த சூழலையும் வர்ணிப்பதில் அந்த இடங்களை நம் கண் முன்னே கொண்டு
வருகிறார் கல்கி. ஒரு அரசனுக்கு தன் தாய் நாட்டின் மேல் உள்ள பற்று, ஆட்சி முறைகளும்
மக்களின் வாழ்வாதாரங்கலும் இதில் கூறப்பட்டுள்ளன, கதையில் வரலாற்று கதாபாத்திரங்களை
சேர்த்து உண்மை சம்பவத்தை கூறுவதுபோல் அமைத்திருப்பது கதைக்கு பலத்தைச் சேர்க்கிறது.
இடையிடையே கேள்விகள் எழுந்தாலும் அவற்றிற்கானா விடையை இறுதியில் கூறி திருப்திபடுத்துகிறார்.
2
கல்கியின்
முதலாவது வரலாற்றுப் புதினம் ‘பார்த்திபன் கனவு’ (1941). தமிழ் வரலாற்று புதின ஆசிரியர்களில்
முதன்மையானவராக போற்றப்படுபவர் கல்கி. ஒப்பீட்டளவில் இவர் எழுதிய வரலாற்று புதினங்கள்
எண்ணிக்கையில் சிறிது எனினும் தரத்தில் சிறந்தவை. பொன்னியின் செல்வனுக்கு நிகராக தமிழில்
வேறு நாவல்கள் இல்லை எனலாம். கல்கியின் நாவல்களில் பொன்னியின் செல்வனுக்கு அடுத்ததாக
பார்த்திபன் கனவு தான் சிறந்தது என சொல்வேன். சிவகாமியின் சபதம் இதற்கு பிறகு தான்.
ஒரு
காலத்தில் கரிகால் சோழன், கிள்ளிவளவன் என புகழ் பூத்திருந்த சோழ ராட்சியம் பிற்காலத்தில்
பல்லவர் ஆட்சி ஓங்க சிற்றரசாகிறது. மீண்டும் விஜயாலய சோழன் காலத்தில் ஓரளவு எழுச்சி
பெற்றாலும் இடைப்பட்ட காலத்தில் சோழர்கள் சிற்றரசர்களாகவே இருந்தார்கள். இந்நாவல் நரசிம்ம
பல்லவன் ஆட்சிக்காலத்தில் சிற்றரசனாக கப்பம்கட்டி அரசாண்ட பார்த்திபன் எனும் சோழ அரசனின்
கனவைப் பற்றியது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நுணுக்கமாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டிருக்கிறது.
இமயம் சென்று புலிக்கொடி நாட்டிய கரிகால் சோழன் போன்ற புகழ் பூத்த சோழர்கள் பயன்படுத்திய
வாளைக் கப்பம் கட்டி ஆட்சி செய்யும் சிற்றரசனான தான் பயன்படுத்த கூடாதென பத்திரப்படுத்தி
வைத்தது மட்டுமல்லாது சோழர்கள் மீண்டும் சுதந்திரமாக ஆட்சி செய்யவேண்டும் என விரும்புகிறான்.
தனது ஆசைகளை சித்திரமாகவும் தீட்டி வைக்கிறான். இவனது மனைவி சேர வம்சத்து அருள்மொழி
தேவி. இவர்களது மகன் விக்ரமன்.
வாதாபிப்போரில்
பல்லவர்களுடன் இணைந்து போரிட சம்மதித்தும் அதற்கு பதிலாக சோழர்களை கப்பம் செலுத்தாத
சுதந்திர அரசாக்க வேண்டும் என கோரி நரசிம்ம பல்லவனுக்கு ஓலை அனுப்புகிறான். ஆனால் நரசிம்ம
பல்லவன் பதிலே அனுப்பவில்லை. இதனால் அவன் போரில் கலந்து கொள்ளாததுடன் கப்பம் செலுத்தவும்
மறுக்கிறான். வாதாபியை வென்ற பல்லவப் பெரும் படையுடன் தோல்வி ஏற்படும் என தெரிந்தே
சிறுபடையுடன் சென்று மோதி வீர மரணம் அடைகிறான். (தென் நாட்டு சிற்றரசர்கள் சிலர் பல்லவர்களை
வெறுத்ததால் அவர்கள் வாதாபிப்போரில் புலிகேசி சார்பாக போரிட்டார்கள் என்றும் பார்த்திபன்
வட நாட்டவருடன் இணைய விருப்பமில்லாததால் போரில் கலந்துகொள்ளவில்லை எனவும் சிவகாமியின்
சபதத்தில் வாதாபிப்போர் பற்றி குறிப்பிடும் போது பார்த்திப சோழன் பற்றிய குறிப்பு வருகிறது.)
பல்லவர்கள் தமது எருது கொடியை வாதாபி வெற்றியின் பின்னர் சிங்கமாக மாற்றி விட்டார்கள்.
இந்நாவலை
வாசிப்பவர்களுக்குப் பார்த்திபன் மீது பெருமதிப்பு வரும் என்பது நிச்சயம். புலிக்கொடிக்கு
அவமானம் நேரலாகாது என்பதற்காகத் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து போரிடுகிறான். சுதந்திர
வேட்கை மிக்கவனாக அவனது பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. இந்நாவலின் முக்கிய பாத்திரங்களாகப்
படகோட்டி பொன்னன், அவனுடைய மனைவி வள்ளியைச் சொல்லலாம். இவர்கள் பொன்னியின் செல்வன்
பூங்குழலி, மந்தாகினிக்கு ஒப்பானவர்கள். சிவகாமியின் சபதத்தில் வரும் பரஞ்சோதி, நாகநந்தி
எனப்படும் நீலகேசி போன்றவர்களையும் காணலாம்.
தமிழ்நாட்டில்
அக்காலத்தில் நிலவிய நரபலி கொடுக்கும் கொடிய சமயக் கொள்கைகளை இல்லாது ஒளித்தமை, நீதி
தவறாது ஆட்சி செய்தமை, மாறு வேடம் பூணும் திறமை என பேரரசர் நரசிம்மரின் பெருமைகள் நாவல்
முழுவதும் நிறைந்துள்ளன. சிவனடியாராக மாறுவேடம் பூண்டு விக்கிரம சோழனுக்கும் உதவுகிறார்.
விக்ரமனும் தந்தை போலவே சுதந்திர வேட்கை உடையவனாக இருக்கிறான். நரசிம்மரின் மகள் குந்தவியைக்
காதல் மணம் புரிகிறான். சுதந்திர சோழ அரசை சிறப்பாக ஆட்சி செய்கிறான். எனினும் பார்த்திபனின்
ஆசையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. சூரியனுக்கு முன் மற்றய கிரகங்கள் ஒளி மங்கி
விடுவது போல இவனது புகழ் பரவ நரசிம்ம சக்ரவர்த்தியின் புகழ் தடையாக இருந்தது. வழி வழியாக
சோழ அரசர்கள் தமது புதல்வர்களுக்குப் பார்த்திப சோழனின் கனவையும் வீர மரணத்தையும் சொல்லியே
வளர்க்கிறார்கள். 300 வருடங்களின் பின் வந்த ராஜராஜர், ராஜேந்திரர் காலத்திலேயே பார்த்திப
சோழன் கனவு முழுமையாக நிறைவேறுகிறது.
3
தமிழக வரலாற்றைச் சிறப்பித்த பெருமை சோழர்களையே
சாரும். சோழர்களின் வரலாற்றை அறிய உதவியாகப் பல ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றுள்
இன்றிமையாத ஒன்று இலக்கியங்கள். இலக்கியங்களிலும் குறிப்பாக இக்கால இலக்கியங்களில்
சோழர்களின் வரலாற்றை நம் கண்முன் கொணர்ந்த பெருமை வரலாற்று நாவல்களை இலக்கிய உலகிற்கு
படைத்தளித்த கல்கியின் படைப்புகளையே சாரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
வரலாற்று
நாவல்களின் தந்தை – கல்கி
சோழநாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்,
மாயூரத்திற்கு அருகில் புத்தமங்கலம் என்ற சிற்றூரில் பிறந்து, வரலாற்று நாவல்களால்
தமிழ் இலக்கிய நெடும் பரப்பில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டவர் கல்கி. ஒருமுறை
நண்பர்களுடன் மாமல்லபுரம் சென்று கடற்கரை மணல்வெளியில், நிலவொளியில் அமர்ந்திருந்த
போதே கல்கிக்கு வரலாற்று நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் மனத்தில் தோன்றியதாகச் ‘சிவகாமியின்
சபதம்’ நாவலின் முன்னுரையில் கூறியுள்ளதன் மூலம் அறியலாம்.
கல்கியின் மனத்தில் வரலாற்று நாவலை எழுதவேண்டும்
என்ற ஆவல் தோன்றியவுடன் தன்னை ஒரு வரலாற்று ஆராய்ச்சி மாணவனாகவே கருதிக் குறிப்புகளைத்
திரட்டலானார். பல்வேறு வரலாற்று நூல்களைப் படித்ததோடு தான் எழுதவிருக்கும் வரலாற்று
நாவலோடு தொடர்புடைய மாமல்லபுரம், தஞ்சை, இலங்கை போன்ற நாடுகளுக்கும் ஊர்களுக்கும் அஜந்தா
போன்ற இடங்களுக்கும் சென்று கண்டு வந்தார்.
கல்கி தம் வரலாற்று நாவல்களில், வரலாற்றுச்
சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வரலாற்று மாந்தர்களையும், கற்பனை மாந்தர்களையும் சேர்த்து
வரலாற்றுக்கு முரணாகாமல் அக்கால மக்களின் பழக்க வழங்கங்கள், மனவியல்புகள், கலை, இலக்கியச்சிறப்பு
முதலானவைகள் வெளிப்படுவதற்கு ஏற்ற கற்பனை வளத்தோடு, நாவலுக்குரிய தோற்றம், உள்ளடக்கம்
குன்றாத வகையில் படைத்தளித்தார். ஆகவே கல்கி வரலாற்று நாவல்களின் வழிகாட்டி என்று புகழப்படுகிறார்.
கல்கியின்
பார்த்திபன் கனவு
‘பார்த்திபன் கனவு’ கல்கியின் முதல் வரலாற்று
நாவலாகும். மகத்தான மானுட நாடகங்களை உருவாக்க கல்கி எடுத்து வைத்த முதல் அடி இது எனலாம்.
அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு நாட்டுப்பற்று
தோன்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு கல்கி வரலாற்று நாவலை எழுதியிருக்க வேண்டும் என்று
கூறும் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள், கல்கியின் பார்த்திபன் கனவு நாவலின் முன்னுரையில்,
“சோழநாடு சுதந்திரம் இழந்து அடிமை வாழ்வு வாழ்கிறது. அதன் சுதந்திர வாழ்வையும், பரதகண்டம்
முழுவதிலும் பரந்து நிற்க வேண்டிய புகழையும் குறித்துப் பார்த்திபன் கனவு கண்டு, அக்கனவைச்
சித்திரமாக எழுதி, ஏங்கி ஏங்கி வருந்துகிறான். தனது ராணியாகிய அருள்மொழியையும், தன்
புதல்வனாகிய விக்கிரமனையும் தன் கனவுலகைக் காணச் செய்கிறான். சுதந்திரத்தை மீட்கும்
பொருட்டு நரசிம்ம பல்லவச் சக்ரவர்த்தியுடன் வீரப்போர் செய்து மடிகிறான். இவ்வாறு நாவலின்
முதலிலிருந்து கடைசிவரை தேசப்பற்று என்னும் அடிநாதமே ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்பார்.
நாவலின் வெற்றி அதன் கதைக்கரு, கதைப்பின்னல்,
பாத்திரப்படைப்பு, உரையாடல், உத்திமுறைகள், காட்சி, வருணனை, நடை ஆகியவற்றை அடிப்படையாக
கொண்டே அமையும்.
பார்த்திபன் கனவு – கதைப்போக்கு
பார்த்திபன் கனவைக் கல்கி அவர்கள் மூன்று
பாகங்களாகப் பகுத்துள்ளார். பார்த்திப சோழன் மரணத்துடன் முதல் பாகமும், ஆறு ஆண்டுகளுக்குப்
பின்னர் நடப்பதாகத் தொடங்கும் இரண்டாம் பாகம் விக்கிரமன் செண்பகத்தீவுக்குச் செல்ல,
அரசி அருள்மொழி சிறுத்தொண்டருடன் புண்ணிய நகரங்களைத் தரிசிக்கச் செல்வதாகவும், அதன்
பின் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கும் நிகழ்ச்சியுடன் மூன்றாம் பாகம் தொடங்குவதாக
அமைக்கப்பட்டுள்ளது. இக்கதை சுமார் பத்து ஆண்டுகள் நடப்பதாகக் கல்கி அமைத்துள்ளார்.
பார்த்திப சோழனின் கனவு, அவன் விக்கிரமனிடம்
பெறும் வாக்குறுதி, சிவனடியாரான நரசிம்மர் பார்த்திபனுக்குத் தரும் வாக்குறுதி, அதன்படி
விக்கிரமனைச் சுதந்திர மன்னனாக்கச் செண்பகத்தீவுக்கு அனுப்புதல், அவன் மாவீரத்தை விளக்கச்
சிவனடியாரைக் கபால பைரவனிடமிருந்து விக்கிரமன் காப்பாற்றுதல், நரசிம்மர் அவனைச் சோழ
நாட்டின் சுதந்திர மன்னனாக்குதல் என்பதாக நாவலின் கதை கட்டுக்கோப்போடு முரணின்றி வளர்ந்து
முழுத்தன்மை பெறுவதை அறிய முடிகிறது,
பாத்திரப்படைப்பு
தன் சோழநாடு எப்படி இருக்க வேண்டும் என்று
கனவு கண்டு ஓவியமாக வரைந்து, பெரும் படை கொண்ட நரசிம்ம வர்ம பல்லவனிடம் தோல்வி அடைந்து
இறப்பதாகப் பார்த்திப மகாராஜா காட்சியளிக்கிறார்.
பார்த்திப மகாராஜாவின் மகனாக அவசரப்பட்டு
எதையாவது செய்து மாட்டிக்கொள்வதும், அடுத்தவரின் உதவியில் தப்பித்துக் கொள்வதுமாக விக்கிரமனின்
கதாப்பாத்திரம் மூலம் சுவாரசியப்படுத்தி இருக்கிறார் கல்கி.
படகோட்டி பொன்னனும், அவன் மனைவி வள்ளியும்,
சக்ரவர்த்தி மகள் குந்தவியும் சுவாரசியத்தை அதிகப்படுத்துகின்றனர். குந்தவி விக்கிரமனை
நினைத்து உருகுவதும், அவனுக்காகத் தன் தந்தை நரசிம்மச் சக்ரவர்த்தியுடன் வாக்குவாதம்
செய்வதுமாகிய இடங்களில் கல்கி அழகான வர்ணனையைத் தந்துள்ளார்.
நரசிம்மவர்மனால் செண்பகத்தீவு சென்று மன்னனான
விக்கிரமன் தேவசேனனாக மாறுவேடம் பூண்டு மாமல்லபுரம் செல்ல, வீரசேனனால் காப்பாற்றப்படுகிறான்.
மாரப்பனால் காஞ்சிக்கு அனுப்பிவைக்கப்பட்ட விக்கிரமன் கபாலிகர்களிடமிருந்து பொன்னனால்
காப்பாற்றப்பட்டு, மகேந்திர மண்டபத்தில் சிறுத்தொண்டர் குழுவினருடன் இருந்த அருள்மொழியைச்
சந்திக்கின்றான்.
சிறுதொண்டர் பல்லவரின் படைத்தலைவராக வாதாபி
சென்றபோது, அவரால் உயிர்ப்பிச்சையளிக்கப்பட்ட, நீலகேசியே கபாலருத்ர பைரவன் என்றும்,
அவன் சூழ்ச்சியினால் கலகம் உண்டாக்கி நாட்டை வெல்லக் கருதியதாகக் கூற, மாரப்பன் நீலகேசியாகிய
பைரவனைக் கொன்றார்.
விக்கிரமன் மீண்டும் கைது செய்யப்பட்டு
விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட, விசாரணையில் நரசிம்மரே சிவனடியார் என்பதாகப் பாத்திரங்களைப்
படைத்துச் செல்கிறார் கல்கி.
பார்த்திபன்
கனவு நாவலின் தொடக்கமும் முடிப்பும்
‘பார்த்திபன் கனவு’ நாவல் தோணித்துறை எனும்
அத்தியாயத்தில் காவிரிக்கரையின் இயற்கை வருணனையோடு தொடங்குகிறது. ராஜாவும் ராணியும்
பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு யுத்தம் வரப்போவதாகப் பொன்னன் கூறுகிறான். அப்போது மகாராஜாவுக்குச்
செய்தி கொண்டு வந்த வீரன் ஒருவன் தோணியைச் செலுத்துமாறு கூறுகிறான்.
சோழநாட்டில் போர் வரப்போகிறதே! யாருடன்
சோழன் போரிடப் போகிறான்? அரசருக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறான் ஒரு வீரன்! அது
என்ன செய்தி? போரைப்பற்றிய செய்தியா? வேறு செய்தியா? என்று வாசகர்களைப் பார்த்திபன்
கனவு எனும் கோட்டைக்குள் ஆவலுடன் நுழையச் செய்கிறது கல்கியின் நடை. இவ்வாறு ஆவலுடன்
தொடங்கிய பார்த்திபன் கனவு நாவல், நரசிம்மனின் முயற்சி வென்றதா? குந்தவி காதலனைக் கைப்பிடித்தாளா?
விக்கிரமன் பார்த்திபனின் கனவை மெய்ப்பித்தானா? விக்கிரமனின் தாய் மீட்கப்பட்டாளா?
விக்கிரமனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது.
பார்த்திபன் சிறந்த வீரன் என்பதை அறிந்த
நரசிம்மர் தனது இலட்சியத்தையும் விடுத்து நாடு கடத்தப்பட்ட விக்கிரமன் அதை மீறித் திரும்பியதால்,
சோழரின் மணிமகுடத்தை விக்கிரமச் சோழர் இனிமேல் தனியாகத்தான் தலையில் தாங்க வேண்டும்
என்று புதுமையான தண்டனை அளிக்க, விக்கிரமன் சோழ நாட்டின் அரியணையில் அமர்ந்து ஆட்சி
செய்தான். மேலும் பார்த்திபன் கனவில் ‘கனவு நிறைவேறியது’ என்னும்
இறுதி அத்தியாயத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு நாடாக்கித்தன் கீழ் கொண்டுவந்து ஆளும்
நரசிம்மவர்மரின் இலட்சியக்கனவு நிறைவேறவில்லை
என்பதாக நாவல் சுவையிறக்கமாக அமைகிறது.
சோழ
வரலாற்றை உணர்த்திய பார்த்திபன் கனவு
பொதுவாக
வரலாற்று நாவல்களில் காணப்படுவது போன்றே வீரமும் காதலும் முதன்மைப்படுத்தப்படுகின்றன
என்றாலும், தமிழகத்தில் சைவமும் சமணமும் மோதிக்கொண்ட ஒரு காலச்சூழலில் காபாலிகச் சமயம்
அரசியலில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. அரசியலும் சமயமும்
கைக்கோர்த்துக் கொள்வதனால் நிகழும் தீமை தெளிவாக முன்வைக்கப்படுகிறது.
கடல் கடந்த நாடுகளில் புலிக்கொடி பறக்க
வேண்டும் என்று பார்த்திபன் கண்ட கனவு சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னர், இராசராசன்,
இராசேந்திரன் ஆகிய சோழப்பேரரசர்கள் காலத்திலேயே முழுமையாக நிறைவேறியது என்னும் வரலாற்று
உண்மையை உணர்த்தும் வகையில் பார்த்திபன் கனவு நாவல் அமைந்துள்ளது. கல்கியைப் போன்ற
வரலாற்று நாவலாசிரியர்களின் படைப்புகள் வழி நாட்டுப்பற்றும், மக்களின் பண்பாடும், பழக்கவழக்கங்களும்
இளைய சமுதாயத்தினரால் உணரப்படவேண்டும்.
Comments
Post a Comment